திருப்பூர்

முகவரி கேட்பதுபோல நடித்து ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் வீட்டில் திருட்டு

31st Jul 2019 09:34 AM

ADVERTISEMENT

தாராபுரத்தில் முகவரி கேட்பதுபோல நடித்து, ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் ரூ.5.40 லட்சத்தை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனர். 
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே சென்னியப்பா நகரில் குடியிருப்பவர் நடராஜ் (65). இவர் தாராபுரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தனியாக வசித்து வரும் நடராஜ் செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்குச் சென்றுள்ளார். பின்னர் தனது சேமிப்புக் கணக்கில் இருந்து ரூ.5.40 லட்சத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். 
அப்போது, வங்கியில் இருந்து 2 இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்த 4 பேர் நடராஜைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். 
அவரது வீட்டின் அருகே வாகனங்களை நிறுத்திவிட்டு புறவழிச் சாலைக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று நடராஜிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர்.
பின்னர் அதில் இருந்த ஒருவர் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து, நடராஜ் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த பையை மேஜை மீது வைத்துவிட்டு தண்ணீர் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றுள்ளார்.
அப்போது, திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பணம் இருந்த பையை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். நடராஜ் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தாராபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
மேலும், அதே பகுதியில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT