திருப்பூர்

கர்ப்பிணிகள் தவறாமல் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

31st Jul 2019 08:16 AM

ADVERTISEMENT

எதிர்கால தலைமுறையினர் ஆரோக்கியமாக வாழ கர்ப்பிணிகள் தவறாமல் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தாயம்பாளையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனை தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: 
தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு வகையான சிறப்பான திட்டங்கள்  பொது சுகாதாரத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் சேவைகளை குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள மருத்துவமனை தினமாக கொண்டாடப்படுகிறது.
முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு  ரூ.18 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.14 ஆயிரம் தொகையாகவும், தலா ரூ.2 ஆயிரம் மதிப்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய அம்மா தாய் சேய் நலப்பெட்டகம் மற்றும் அம்மா பரிசுப் பெட்டகமும் வழங்கப்படுகிறது. மேலும், கருவுற்ற தாய்மார்கள் முறையான சிகிச்சை மேற்கொண்டு மருத்துவரின் ஆலோசனையின் படி தவறாமல் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டால் எதிர்கால தலைமுறையினர் ஆரோக்கியமாக வாழலாம் என்றார். 
முன்னதாக, மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நடத்தப்பட்ட கண்காட்சியை ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT