கொப்பரைக் கொள்முதல் செய்வதை கைவிட்டு முழு தேங்காயாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
தாராபுரத்தில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஏ.காளிமுத்து தலைமை வகித்தார்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளில் இயற்கைச் சூழல் காரணமாகவும், வேளாண் விளைபொருள்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விலை நிர்ணயம் செய்யாத காரணத்தாலும் அரசு, தனியார் வங்கிகளில் வாங்கிய கடன்களை விவசாயிகளால் திருப்பிச் செலுத்த இயலவில்லை. இதனால் தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 456 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆகவே, கடன் சுமையில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் பெற்ற கடன்களை சிறு, குறு விவசாயிகள் என தரம் பிரிக்காமல் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விளைநிலங்களின் வழியாக உயர்மின் அழுத்தக் கோபுரம் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட்டு கேரளத்தைப்போல் நிலத்தடியில் கேபிள்களைக் கொண்டு செல்ல வேண்டும். கொப்பரைக் கொள்முதல் செய்வதை கைவிட்டு முழு தேங்காயாக கொள்முதல் செய்ய வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியத்தின் கிளை அலுவலகங்களை ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் அமைக்க வேண்டும்.
காங்கயம், உப்பளாச்சேரி உள்ளிட்ட பாரம்பரிய மாடுகளின் கன்றுகளை வளர்ப்பதற்கு விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்க வேண்டும். நொய்யல் ஆற்றின் 185 கி.மீ.தொலைவுக்கும், அமராவதியில் 225 கி.மீ. தொலைவிலும் கரைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டு, பனை மரங்களை வளர்க்க வேண்டும். அமராவதி சர்க்கரை ஆலையை நவீனமயமாக்க ரூ.25 கோடியை அரசு ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விவசாயிகள் சங்கச் செயலாளர் கே. எஸ்.சுப்பிரமணியம், திருப்பூர் மாவட்டத் தலைவர் கதிர்வேல் , ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.