குண்டடம் அருகே விவசாய நிலத்தில் உயர்மின் அழுத்தக் கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகள் அதிகாரிகளை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
ஊதியூரை அடுத்துள்ள நொச்சிப்பாளையம் (புகழூர்) முதல் கேரள மாநிலம், திருச்சூர் வரை உயர்மின் அழுத்தக் கோபுரம் அமைக்கும் பணிகளுக்காக விவசாய நிலங்களில் அளவீடு செய்யும் பணியை பவர்கிரீட் நிறுவனத்தினர், வருவாய்த் துறை அதிகாரிகள் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், குண்டடத்தை அடுத்துள்ள பொன்னாளிபாளையத்தைச் சேர்ந்த ராமாத்தாள், குணசேகரன் ஆகியோரின் விவசாய நிலங்களில் அளவீடு செய்யும் பணிக்காக பவர் கிரீட் நிறுவன அதிகாரிகள், தாராபுரம் துணை வட்டாட்சியர் புவனேஸ்வரி, காவல் துறையினர் திங்கள்கிழமை அங்கு சென்றனர். அப்போது, அங்குள்ள விவசாயிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தகவல் கிடைத்து அங்கு சென்ற விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் என 50க்கும் மேற்பட்டோர்
நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளின் வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள், காவல் துறையினர் சம்பவ இடத்தில் இருந்து திரும்பிச் சென்றனர்.