திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பால் கொள்முதல் நிலையங்கள் அனைத்திலும் பாலின் தரத்தை அளவீடு செய்யும் கருவி பொருத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். இதில், விவசாயி பரமசிவம் பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பால் கொள்முதல் நிலையங்களில் தரம், அளவு குறித்து ஆய்வு செய்யும் கருவி இல்லை. எனவே, இந்தக் கருவிகளைப் பொருத்தினால் கால்நடை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
விவசாயி ராமசாமி: மங்கலம் கிராமத்தில், எம்.செட்டிபாளையத்தில் பிஏபி வாய்க்காலுக்காக 1981ஆம் ஆண்டு எனக்கு சொந்தமான நிலத்தின் குறுக்கே வாய்க்கால் வெட்டப்பட்டது. கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை எனக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. எனக்குச் சொந்தமான பூமியில் சுமார் 3/4 ஏக்கர் பரப்பு வாய்க்காலுக்கு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, எனக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர வேண்டும் என்றார்.
விவசாயி வேலுமணி: அரசூர் முதல் ஈங்கூர் வரையில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வரும்போது நேர்வழியில் செல்லாமல் சுற்றிச் செல்கிறது. நேர் வழியாகச் சென்றால் இரு விவசாயிகள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள். ஆனால், தற்போது வழிமாற்றிச் செல்வதால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். மேலும், மற்றொரு மின் பாதையையும் கடக்க வேண்டியுள்ளதால் அரசுக்கும் பல கோடி இழப்பு ஏற்படும் என்றார்.
விவசாயி ஈஸ்வரமூர்த்தி: அமராவதி பகுதியில் சுமார் 3,200 ஏக்கர் பரப்பளவுக்கு கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், அரசு கரும்பு ஆலையில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
தனியார் ஆலை கொண்டுச் சென்றால் மிகவும் குறைந்த விலை கேட்கிறார்கள். எனவே, அரசு கரும்பு ஆலையை மறு சீரமைக்க வேண்டும். அலங்கியம் பகுதி முழுவதும் கிணறு வெட்ட விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
கனிம வளத் துறையினர் ஆய்வு செய்த பின்புதான் அனுமதி வழங்கப்படுகிறது. இதனால், கிணறு வெட்டி விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்றார்.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 87 மனுக்கள்
பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்த முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் பிரபு, துணை ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணுவர்தினி, இணை இயக்குநர் (வேளாண்மை) வளர்மதி,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.