வெள்ளக்கோவில் திருமலை அம்மன் கோயிலில் வருடாந்திர சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில்- கரூர் சாலை உள்ள அம்மன் கோயில் வீதியில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயிலைச் சேர்ந்த உள்ளூர் ஆந்தை குலத்தவர்களின் பெண் தெய்வமாக திருமலை அம்மன் உள்ளது.
இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை சாமி செய்தல், பெயர் வைத்தல் என்னும் சடங்கு நடைபெறுவது வழக்கம்.
இதற்கு முன்னதாக எழுதிங்கள் எனப்படும் சீர் செய்யப்படும். இந்தக் கோயில் குலத்தைச் சேர்ந்த குழந்தைகள் குறிப்பிட்ட வயதை அடைவதற்கு முன்பு உறவினர்களை அழைத்து அருமைக்காரர் மூலம் எழுதிங்கள் சீர் செய்து, பின்னர் கோயிலில் குழந்தைகளுக்கு மற்றொரு பெயர் வைத்து வழிபாடு நடத்தப்படும்.
இதனை முன்னிட்டு கோயிலில் பொங்கல் வைத்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் உள்ளூர், வெளியூர்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.