திருப்பூர்

4 மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது; 75 பவுன் மீட்பு

22nd Jul 2019 10:19 AM

ADVERTISEMENT

திருப்பூர், கோவை, திருச்சி, திண்டுக்கல்ஆகிய 4  மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை மூலனூர் காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, 75 பவுன் நகைகளை மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த மூலனூர் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்து சென்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகையை இளைஞர் பறிக்க முயன்றார். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்த இளைஞரைப் பிடித்து மூலனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
விசாரணையில், அந்த இளைஞர் திண்டுக்கல் மாவட்டம், கணக்கம்பட்டியைச் சேர்ந்த கே.ரவிகுமார் (19) என்பதும், பல்வேறு குற்றச் சம்பவங்களில் அவர் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது. 
மேலும், திருச்சி, பாலக்கரை, சங்கிலியாண்டபுரம், காந்தி நகரைச் சேர்ந்த எஸ். நிர்மல் பாரதி (எ) குமார் (26), கோவை, பெரிய கடை வீதியைச் சேர்ந்த வி.தினேஷ் (39) ஆகியோருடன் சேர்ந்து திருப்பூர் மாவட்டம், தாராபுரம், மூலனூர், திண்டுக்கல்,  கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறி, திருட்டுச் சம்பவங்களில் ரவிகுமார் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் மீது வழிப்பறி, திருட்டு தொடர்பாக 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.
விசாரணைக்குப் பின்னர் நிர்மல் பாரதி, தினேஷ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த 3 பேரிடமிருந்து 75 பவுன் நகைகளையும் காவல் துறையினர் மீட்டுள்ளனர்.  ரவிகுமார், நிர்மல்பாரதி, தினேஷ் ஆகிய மூவரையும் போலீஸார் தாராபுரம் குற்றவியல் நடுவர் சசிகுமார் முன்பாக ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT