திருப்பூர்

சுடுகாட்டில் உரக் கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் வரவில்லை

22nd Jul 2019 10:19 AM

ADVERTISEMENT

திருப்பூர் பெரிச்சிபாளையம் சுடுகாட்டில் உரக் கிடங்கு அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு மாநகராட்சி அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 4ஆவது மண்டலத்திற்கு உள்பட்ட  பெரிச்சிபாளையம்,  திரு.வி.க. நகர் செல்லும் வழியில் உள்ள சுடுகாட்டில் உரக் கிடங்கு அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,  மயானத்தில் உரக் கிடங்கு அமைக்க பெரிச்சிபாளையம், அண்ணமார் காலனி, திரு.வி.க. நகர், வெள்ளியங்காடு, கோபால் நகர், பட்டுக்கோட்டையார் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மாற்று இடத்தைத் தேர்வு செய்து உரக் கிடங்கு அமைக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் சார்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மயானத்தில் உரக் கிடங்கு அமைப்பதற்காக  ஜூன் 28ஆம் தேதி பொக்லின் இயந்திரத்துடன் சென்ற அதிகாரிகள் அங்குள்ள மதில் சுவரை இடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து பொக்லின் இயந்திரத்தை சிறைபிடித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்  இப்பணி நிறுத்தப்பட்டது. 
இந்த நிலையில், மயானத்தில் உரக் கிடங்கு அமைக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்ய ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும் என்று அப்பகுதியில் சில தினங்களுக்கு முன்பாகவே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதன்படி, நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சுடுகாட்டில் ஞாயிற்றுக்கிழமை திரண்டனர். ஆனால்,  பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாநகராட்சி அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். இக்கூட்டத்தில், உரக் கிடங்கு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT