திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினருக்குக் கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள்ஜூலை 23 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே,எஸ்.பழனிசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் 2019-20ஆம் நிதியாண்டில் சிறுபான்மையினருக்கு ரூ. 79 கோடி அளவில் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், திருப்பூர் மாவட்டத்திற்கு 2019-20ஆம் நிதியாண்டிற்கு ரூ.1 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனி நபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கறவை மாடு, ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் திருப்பூர் மாவட்டத்தில் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.
திருப்பூர் வடக்கு வட்டத்தில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் திருப்பூர் கிளையில் ஜூலை 23 ஆம் தேதி காலை 10.30 முதல் 12 மணி வரையிலும், திருப்பூர் தெற்கு வட்டத்தில் நல்லூர் கிளையில் பிற்பகல் 2.30 முதல் 5 மணி வரையிலும், அவிநாசி வட்டத்தில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அவிநாசி கிளையில் ஜூலை 24 ஆம் தேதி காலை 10.30 முதல் 12 மணி வரையிலும், ஊத்துக்குளி வட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பிற்பகல் 2.30 முதல் 5 மணி வரையிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
பல்லடம் வட்டத்தில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பல்லடம் கிளையில் ஜூலை 25 ஆம் தேதி காலை 10.30 முதல் 12 மணி வரையிலும், காங்கயம் வட்டத்தில் ஜூலை 26 ஆம் தேதி காலை 10.30 முதல் 12.30 வரையில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் காங்கயம் கிளையிலும், தாராபுரம் வட்டத்தில் தாராபுரம் நகர கூட்டுறவு வங்கியில் ஜூலை 26 ஆம் தேதி பிற்பகல் 2.30 முதல் 5 மணி வரையிலும்,, உடுமலை வட்டத்தில் நகர கூட்டுறவு வங்கியில் ஜூலை 30 ஆம் தேதி காலை 10.30 முதல் 12.30 வரையிலும், மடத்துக்குளம் வட்டத்தில் கோவை மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கியின் மடத்துக்குளம் கிளையில் அதே நாளில் பிற்பகல் 2.30 முதல் 5 மணி வரையிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த மதத்தினர் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.