திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே குட்டகம் மொக்கனீஸ்வரர் கோயில் கல்வெட்டுகளை கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
குட்டகம் ஊராட்சி, கூலேகவுண்டன்புதூரில் பழைமைவாய்ந்த மீனாட்சியம்மன் உடனமர் மொக்கனீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் பழைமையான கற்பலகையில் பொறிக்கப்பட்ட இரு கல்வெட்டுகளை தனியார் கல்லூரி பேராசிரியர் ரவி தலைமையில் தொல்லியல் துறை மாணவர்கள், ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து பேராசிரியர் ரவி கூறியது:
குட்டகம் என்ற ஊர் முற்காலத்தில் குடவோடான ராசவிச்சாதிரநல்லூர் என அழைக்கப்பட்டு வந்தது. இங்கு வாழ்ந்த விச்சாதிரனின் மனைவி எறுளங்கோதை என்பவர் இந்த ஆலயத்தை அமைத்துள்ளார் என்பதற்கு சான்று உள்ளது.
மேலும் அந்த காலத்தில் பெண்களுக்கான அனைத்து உரிமைகளும், தனி கவனமாக பொருளாதார பலம் பெற்றிருந்ததையும் உணர்த்துகிறது. இது கி.பி.1009 ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு என்றாலும், 1000 ஆண்டுகளைக் கடந்தும், மண்ணின் பெருமையை உணர்த்துகிறது என்றார்.