திருப்பூர்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை கொள்முதல்

16th Jul 2019 07:25 AM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளிடமிருந்து கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட உள்ளது. 
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
 தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொப்பரைத் தேங்காய்கள் மத்திய அரசின் நாபெட் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதில், தமிழக அரசு தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக நிர்ணயிக்கப்பட்ட தரம் கொண்ட அரவைத் தேங்காய் கொப்பரை கிலோ ரூ.95.21-க்கும், பந்து தேங்காய் கொப்பரை கிலோ ரூ.99.20-க்கும் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்துள்ளது. இந்த குறைந்தபட்ச விலையை ஜூலை 15ஆம் தேதி முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
 மாவட்டத்தில் பொங்கலூர், காங்கயம், பெதப்பம்பட்டி, உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. 
இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் தங்கள் பகுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.   மேலும், தேங்காய் கொப்பரைக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். ஆகவே இத்திட்டத்தை தென்னை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT