திருப்பூரில் இளைஞர் கொலை வழக்கில் இரு இளைஞர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்துள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்குமார்(25). இவர் திருப்பூர், ஆண்டிபாளையம் பகுதியில் தங்கி இங்குள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் ஆண்டிபாளையம் பிரிவில் உள்ள மதுபானக் கடையில் நண்பர் பார்த்திபனுடன் ஞாயிற்றுக்கிழமை மது அருந்தினார்.
பின்னர் வெளியே வந்தபோது காரில் வந்த கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அருள்குமாரைத் தாக்கியது. அப்போது அதனைத் தடுக்க முயன்ற பார்த்திபன், ஆண்டிபாளையம் ஏழுமலை (25), ராஜமாணிக்கம் (22), விக்னேஷ் (21), பிரகாஷ் (24) ஆகியோரையும் மர்மக் கும்பல் அரிவாளால் வெட்டியதில் அவர்கள் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் மத்திய காவல் துறையினர் அருள்குமார் மற்றும் 5 பேரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அருள்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஆகாஷ் (25), வருண் (21) ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.