வெள்ளக்கோவில் அருகே பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழ்ந்தனர். இவ்விபத்தில் மேலும் இருவர் பலத்த காயமடைந்தனர்.
கோவை மாவட்டம், சூலூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் ஆர். முரளிகண்ணன் (33). இதே ஊரைச் சேர்ந்த ரங்கநாதபுரம் அய்யாசாமி மகன் ஏ. சுரேஷ் (35). திருப்பூர் மாவட்டம், பல்லடம், கோம்பைக்காட்டுப்புதூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த கலுவதேவர் மகன் கே. பாலச்சந்திரன் (37). திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி தாலுகா, கோட்டையாதவர் கல்லக்காட்டைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் மகன் கே. நடராஜ் (29), முருகன் மகன் எம். சுந்தரம் (25), சந்தானகுமார் மகன் எஸ். சொர்ணமூர்த்தி (20). இவர்கள் அனைவரும் சூலூரிலுள்ள தனியார் நூல் மில்லில் வேலை செய்து வந்தனர். இவர்களுடன் வேலை செய்து வரும் முத்துக்குமார் உடல்நிலை சரியில்லாமல் தனது சொந்த ஊரான காரைக்கால் சென்று விட்டார். அவரைப் பார்ப்பதற்காக சக ஊழியர்களான இவர்கள் 6 பேரும் நூல் மில் மேலாளரின் காரில் சனிக்கிழமை இரவு காரைக்காலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
வழியில், வெள்ளக்கோவில் - கரூர் தேசிய நெடுஞ்சாலை ஒத்தக்கடை பிரிவு அருகே இந்த காரும், எதிரே திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்தும் மோதிக்கொண்டன. இவ்விபத்தில் காரை ஓட்டி வந்த ஆர். முரளிகண்ணன், கே. நடராஜ், எம். சுந்தரம், எஸ். சொர்ணமூர்த்தி ஆகிய நான்கு பேரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஏ.சுரேஷ், கே. பாலச்சந்திரன் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பேருந்தில் பயணித்த 22 பயணிகள் காயமின்றித் தப்பினர். இப்பேருந்து மற்றொரு வாகனத்தை முந்திச்செல்ல முயன்றதாலேயே இவ்விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வம், திருப்பூர் தெற்கு மாவட்ட போக்குவரத்து அதிகாரி முருகானந்தம், அரசுப் போக்குவரத்துக் கழக கரூர் கிளை பொறியாளர் கார்த்திகேயன், மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாராணை நடத்தினர்.
கரூர் அருகே கடவூரைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் முருகானந்தன் (44) மீது வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.