தமிழகத்தில் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.
திருப்பூர் மாவட்ட பாஜக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ராக்கியாபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
மாநில அரசு நீர் நிலைகளைத் தூர்வார பொதுமக்கள் மற்றும் அமைப்புகளின் உதவியைக் கேட்டுள்ளது. ஆனால் நீர் வரக்கூடிய இடங்களில் எல்லாம் ஆக்கிரமிப்புகள் உள்ளன. எந்தெந்த வழியில் நீர் வருகிறதோ அந்தப் பகுதிகளில் 10 முதல் 30 சதவீதம் ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆகவே, நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்காக ஏற்கெனவே இருக்கின்ற சட்டத்தை வலுப்படுத்தி மிக குறுகிய காலத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பில் வசித்து வரும் மக்களுக்கு நியாயமான முறையில் அரசு மாற்று இடம் வழங்க வேண்டும்.
தமிழக அரசு தொலைநோக்கு பார்வையுடன் பருவமழைக்கு முன்பாக ஏரி, குளங்களை தூர்வாருவதோடு மழைநீர் சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்தப்பட வேண்டும். வட கிழக்கு மாநிலங்களில் தபால் எழுத்தர் தேர்வு பிராந்திய மொழிகளில் நடத்தப்பட்டால், தமிழகத்திலும் பிராந்திய மொழியில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படும். ஒரு மாநிலத்துக்கு பிராந்திய மொழி அனுமதிக்கப்பட்டால் அனைத்து மாநிலங்களிலும் பிராந்திய மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு. இந்த விஷயத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்றார்.
கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.