திருப்பூர்

நாளை பொது விநியோகத் திட்ட  சிறப்பு குறைதீர் முகாம்

12th Jul 2019 08:57 AM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது. 
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு  முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடித் தீர்வுகாண உள்ளனர்.
 இந்த முகாமானது, அவிநாசி வட்டம் தெக்கலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், திருப்பூர் வடக்கு நெருப்பெரிச்சல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், திருப்பூர் தெற்கு வட்டம், இடுவாய் கிராம நிர்வாக அலுவலகம், இடுவாய் ஊத்துக்குளி வட்டம் தென்முகம் காங்கேயம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பல்லடம் வட்டம், பூமலூர் தமிழ்நாடு வாழ்வாதார இயக்க கட்டடத்தில் நடைபெற உள்ளது. 
அதேபோல உடுமலை வட்டம், எருசனம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மடத்துக்குளம் வட்டம், கொழுமம் என்.ஜி. புதூர்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாராபுரம் வட்டம், சூரியநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் வட்டம், கடலைக்காட்டுப்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. 
இதில், பொதுமக்கள் புதிய மின்னணு குடும்ப அட்டைகளுக்கான மனுக்களை வழங்கவும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் திருத்தம் போன்ற மின்னணு குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். எனவே, இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT