திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர், கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் அலகு 2, திருப்பூர் மாநகராட்சி ஆகியன இணைந்து கல்லூரி வளாகத்தில் மழை நீரை சேகரிப்பு குறித்த கருத்தரங்கை நடத்தின. நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) புஷ்பலதா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநகராட்சி துணை ஆணையர் வாசுகுமார் மழை நீரை சேமிப்பதன் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
மாநகராட்சி சுகதார அலுவலர் முருகன் பேசுகையில், மழைநீரை சேமிப்பதில் மாணவர்களின் பங்கு மிக மிக அவசியம். பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை உயர்த்த அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து, மழை நீரை சேமிக்கும் வரைபடம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும், ஒவ்வொரு வகுப்புகளில் மழை நீரை சேமிக்கும் முறை பற்றிய ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது. இறுதியாக மாணவர் செயலர் சந்தோஷ் நன்றி கூறினார்.