திருப்பூர்

கருடமுத்தூரில் தேவாலய ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

4th Jul 2019 06:40 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகே கருடமுத்தூரில் தேவாலய ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.  
  பொங்கலூர் ஒன்றியம், வடமலைபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கருடமுத்தூரில் கால்நடைப் பராமரிப்புத் துறைக்குச் சொந்தமான 13 ஏக்கர் மந்தை நிலம் உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து தேவாலயம் கட்டியுள்ளனர்.  இதை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்து முன்னணி சார்பில் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
   இந்நிலையில், ஆர்ப்பாட்டம் துவங்கும் முன்பு பல்லடம் வட்ட வருவாய் நிர்வாகம் சார்பில் இந்து முன்னணி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநிலச் செயலாளர்கள் தாமு வெங்கடேசன், கிஷார்குமார், மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ், சண்முகம், கோட்டச் செயலாளர் சேவுகன், மாவட்டச் செயலாளர் லோகநாதன், சர்வேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 அரசுத் துறைகள் சார்பில் பல்லடம் வட்டாட்சியர் சாந்தி, கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி, உதவி இயக்குநர் பிரகாஷம், புத்தரச்சல் மருத்துவர் உதய்சங்கர், வட்ட தலைமை நில அளவையாளர் சாமிமுத்து, பல்லடம் டி.எஸ்.பி. (பொறுப்பு) தன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
  இதில், கால்நடை பராமரிப்புத் துறைக்குச் சொந்தமான அந்த இடத்தை நில அளவீடு செய்து அதில் ஆக்கிரமிப்பு இருப்பின் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்படும். இதற்கு இரண்டு வாரகால அவகாசம் ஆகும் என்று வருவாய் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட  வந்திருந்த  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT