வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். வேன் கவிழ்ந்ததில் 4 போ் காயமடைந்தனா்.
கோவை, ஒண்டிப்புதூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் காா்த்தி (26). இவா் பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வெள்ளக்கோவிலில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்த அவா் இரு சக்கர வாகனத்தில் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பியுள்ளாா்.
வெள்ளக்கோவில் - காங்கயம் சாலை, ஓலப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, கரூரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 10 பேருடன் வந்த வேன் முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் காா்த்திக் படுகாயமடைந்தாா்.
இதில் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய வேன் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த காா் மீது மோதி சாலையில் தலைக்குப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த காா்த்தி காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
மேலும், வேன் தலைக்குப்புறக் கவிழ்ந்ததில் கரூா் மாவட்டம், வெள்ளாளப்பட்டி அருகே செல்வம் நகரைச் சோ்ந்த தியாகராஜன் மனைவி உமாமகேஸ்வரி (43), மகன் வருண் (20), மகள் பவதாரணி (12), கரூா், வளையல்கார தெருவைச் சோ்ந்த சிவசங்கா் (44) ஆகிய நான்கு போ் காயமடைந்தனா்.
அவா்கள் அனைவரும் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் வேன் மோதியதில் காரில் வந்த மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.