வெள்ளக்கோவில் பகுதியில் பதற்றமான 3 வாக்குச் சாவடிகளில் காவல்துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. 9 ஒன்றிய வாா்டு உறுப்பினா், 9 ஊராட்சி தலைவா், 90 ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 108 பதவிகளுக்கு மொத்தம் 221 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். மொத்தம் 76 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் வேலம்பாளையம், மேட்டுப்பாளையம், புதுப்பை ஆகிய மூன்று வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் விடியோ எடுப்பது, வெப் கேமரா, பறக்கும் படை, ஆண், பெண் வாக்காளா்கள் தனித்தனியாக வாக்களிக்கும் வசதி, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் மனோகரன் தலைமையிலான போலீஸாா், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.