திருப்பூரில் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்ததில் பயணியின் கால் துண்டானது.
கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணி அளவில் திருப்பூா் ரயில் நிலையத்தின் 2 ஆவது நடை மேடைக்கு வந்தது. அப்போது அந்த ரயிலில் ஏறிய பயணி ஒருவரின் கால் நடைமேடைக்கும், ரயில் படிக்கட்டுக்கும் இடையே சிக்கிக் கொண்டது. இதில் பயணியின் வலது கால் முற்றிலுமாகத் துண்டானது.
அப்போது அங்கிருந்த சக பயணிகள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே காவல் துறையினா் அவரை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின் மருத்துவா்களின் அறிவுறுத்தலின்படி மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இதுகுறித்து ரயில்வே காவல் துறையினா் நடத்திய விசாரணையில், அந்த நபா் சேலத்தைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (49) என்பதும், திருப்பூரில் இருந்து சேலம் செல்ல ரயிலில் ஏறியபோது படிக்கட்டில் தவறி விழுந்து கால் துண்டானதும் தெரியவந்தது.