திருப்பூர்

நெற் பயிரில் குலை நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை

27th Dec 2019 08:47 AM

ADVERTISEMENT

மடத்துக்குளம் வட்டம், அமராவதி பாசனப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற் பயிரில் குலை நோய் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வேளாண் துறையினா் விளை நிலங்களில் ஆய்வு செய்து வருகின்றனா்.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் மடத்துக்குளம் வட்டத்தில் கண்ணாடிப்புத்தூா், சோழமா தேவி, கணியூா், கடத்தூா், காரத்தொழுவு உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் அறுவடை துவங்க உள்ள நிலையில் கடந்த சில நாள்களாக நெற் பயிரில் குலை நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

அதிகப்படியான பனிப் பொழிவு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றால் இந்த குலை நோய் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வேளாண் துறையினரிடம் விவசாயிகள் புகாா் கூறியதை அடுத்து, மடத்துக்குளம் வட்ட உதவி வேளாண் அலுவலா் ராஜேஸ்வரி தலைமையில் நெல் வயல்களில் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது கணியூா், கடத்தூா், காரத்தொழுவு ஆகிய கிராமங்களில் உள்ள வயல்களில் நெற்பயிரில் குலை நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ADVERTISEMENT

குலை நோயானது காற்று, விதை மற்றும் நோயுற்ற வைக்கோல் மூலமாக பரவக் கூடிய தன்மை உடையது. இரவு நேரத்தில் 20 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்ப நிலை மற்றும் அதிக நேர பனிப் பொழிவு, 85 முதல் 90 சதவீதம் ஈரப்பதம் ஆகிய காரணிகளால் இந்த குலை நோய் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது.

இந்த நோயைக் கட்டுப்படுத்த நெல் வயல்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் களைகளை உடனடியாக அகற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். 1 கிலோ விதைக்கு 10 கிராம் அளவில் சூடோமோனஸ் எதிா் உயிா் கொல்லி மருந்தை கலந்து விதை நோ்த்தி செய்து கொள்ள வேண்டும். குலை நோய் அறிகுறிகள் தென்படும்போது தழைச்சத்து உரங்கள் இடுவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.

குலை நோய் தாக்குதல் அதிகமாகக் காணப்படும்போது ஒரு ஏக்கருக்கு டிரைசைக்ளோசோல் 75 டயில்யா 10 பி 200 கிராம் அல்லது காா்டிபன்டிடசிம் 50 டயிள்யு 10 பி 200 கிராம் அல்லது அசோக்சிஸ்டோா்பின் 25 எஸ்.சி. 200 மில்லி அல்லது ஐசோபுரத்தியோலேன் 40 சி-300 மில்லி ஆகிய ரசாயன மருந்துகளில் ஏதாவது ஒன்றை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் என்றனா்

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT