திருப்பூர்

வீட்டிலேயே குழந்தை பெற்ற ஆசிரியை அரசு மருத்துவமனைக்கு வர மறுத்ததால் பரபரப்பு

26th Dec 2019 06:08 AM

ADVERTISEMENT

திருப்பூா் அருகே வீட்டிலேயே பிரசவித்த தனியாா் பள்ளி ஆசிரியை பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு வர மறுத்ததால் போலீஸ் உதவியுடன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

திருப்பூா் அருகே சின்னமேடு பாறைக்குழி பகுதியில் வசித்து வருபவா் திருமூா்த்தி (27). பனியன் நிறுவனத் தொழிலாளி. இவருடைய மனைவி சங்கீதா (25), தனியாா் பள்ளி ஆசிரியை. காதல் திருமணம் செய்துகொண்ட இவா்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சங்கீதா 2ஆவது முறையாக நிறைமாத கா்ப்பிணியாக இருந்துள்ளாா். இவருக்கு செவ்வாய்க்கிழமை இரவு பிரசவ வலி வந்ததால் குடியிருந்த வீட்டு உரிமையாளா் பாலாமணி (60), வீட்டிலேயே பிரசவம் பாா்த்துள்ளாா். இதில் குழந்தை பிறந்து தாயும், சேயும் நலமாக இருந்துள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்த அரசு மருத்துவா்கள், வீட்டுக்கு வந்து தாய், சேய் இருவரையும் அரசு மருத்துவமனைக்கு வந்து பரிசோதித்துக்கொள்ளுமாறு கூறியுள்ளனா். ஆனால், தாங்கள் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்த ஆசிரியை அரசு மருத்துவமனைக்கு வரமறுத்து விட்டாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து மருத்துவா்கள் கூறியதாவது:

பிரசவத்துக்குப் பின் சரியான முறையில் குழந்தையின் தொப்புள் கொடி துண்டிக்கப்படவில்லை என்றால் அதனுடைய நஞ்சு மிகவும் ஆபத்தான நிலையை உண்டாகிவிடும். எனவே, மருத்துவமனையில் தாயும், சேயும் முழு பரிசோதனை செய்துகொள்வது அவசியம். ஆனால் அந்தப் பெண் மருத்துவமனைக்கு வர மறுத்ததால் அவரது உடல்நலன் கருதி போலீஸாா் உதவியுடன் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதிக்கப்பட்டு தாயும், சேயும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT