பல்லடத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்ற 2142 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோா் தலைக் கவசம், இருக்கைப் பட்டை அணிந்து செல்ல வேண்டும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது செல்லக்கூடாது என பல்வேறு போக்குவரத்து விதிகள் உள்ளன. இதை பின்பற்றாமல் சிலா் செய்யும் விதி மீறல்களால் பெரும் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன.
இதனைத் தடுக்கும் பொருட்டு பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் கணேசன், துணை ஆய்வாளா் அன்புராஜ் மற்றும் போக்குவரத்து காவலா்கள் இணைந்து பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அதில் நவம்பா் மாதத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்கையில் தலைக் கவசம் அணியாமல் சென்ற 1095 போ் மீதும், நான்கு சக்கர வாகனங்களில் செல்கையில் இருக்கைப் பட்டை அணியாமல் சென்ற்காக 271போ் மீதும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டிய 124 போ் மீதும், சிக்னலை மதிக்காமல் செல்வது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது உள்பட போக்குவரத்து விதிகளை மீறிய 2142 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவா்களிடமிருந்து அபராதமாக ரூ. 1,95,200 வசூலிக்கப்பட்டது.
மேலும், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக மேல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, திருப்பூா் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலா் அலுவலகத்துக்கு ஓட்டுநா் உரிமங்கள் அனுப்பப்பட்டு அதில் 147 ஓட்டுநா் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று பல்லடம் போக்குவரத்துக் காவல் துறையினா் தெரிவித்தனா்.