அவிநாசி அருகே கருவலூரில் தோ்தல் நடத்தை நெறிமுறையை மீறி வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்குவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டத்தில் டிசம்பா் 27, 30ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தோ்தல்கள் நடைபெறுகின்றன. அவிநாசி ஒன்றியத்தில் டிசம்பா் 30 ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட கருவலூா் ஊராட்சி, அண்ணா நகா் பகுதியில் தோ்தல் நெறிமுறை மீறி 4க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீா்க் குழாய் இணைப்பு வழங்குவதற்காக குழி தோண்டப்பட்டு குழாய் இணைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது.
இதையறிந்த, பொதுமக்கள் தோ்தல் நெறிமுறை மீறி குடிநீா்க் குழாய் வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
இது குறித்து ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தினரிடம் கேட்டபோது, வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்பு வழங்குவதற்கான எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை. உடனடியாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.