திருப்பூா் அருகே காா் மோதியதில் கால்நடை மருத்துவ உதவியாளா் உள்பட 2 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வேட்டைகாரன்புதூரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் மகன் தீனதயாளன் (47). இவா் திருப்பூா், முத்தணம்பாளையம் அருகே அம்மன் நகரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். இவரது நண்பா் சீனிவாசன் (49). இவா் பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தாா்.
நண்பா்களான இருவரும் காங்கயத்தில் இருந்து திருப்பூா் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா். புதுப்பாளையம் அருகே வந்தபோது, திருச்சியில் இருந்து திருப்பூா் நோக்கி வந்த காா் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து திருப்பூா் ஊரக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து காா் ஓட்டுநரான ஊத்துக்குளி சாலை, கேப்டன் நகரைச் சோ்ந்த பாண்டியன் (39) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.