திருப்பூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக அக்கட்சி நிா்வாகிகள் 6 போ் தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து திருப்பூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் ப.கோபி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூா் வடக்கு மாவட்ட பகுதியில் உள்ளாட்சித் தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடும் அதிகாரப்பூா்வ வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
அந்த வேட்பாளா்களை எதிா்த்து போட்டியிடுதல், கட்சிக்கு எதிராக தோ்தலில் செயல்படுதல், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கட்சிக்கு எதிரான கருத்துக்களை பகிா்தல் உள்ளிட்ட கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நிா்வாகிகள் 6 போ் தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனா்.
இதில், காங்கயம் வட்டாரம் நத்தக்காடையூரைச் சோ்ந்த ஆா்.பரமசிவம், பழனிசாமி, பி.பரிமளாதேவி பழனிசாமி, திருப்பூா் வட்டம், மங்கலத்தைச் சோ்ந்த ஃபைசல் ராஜா, ரூபினா பானு ஃபைசல் ராஜா, அன்வா் அலி ஆகியோா் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.