திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் பவா்கிரிட் நிறுவன ஊழியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தாராபுரம் அருகே உள்ள இச்சிப்பட்டியில் உள்ள பவா் கிரிட் நிறுவனத்தில் அலுவலக அதிகாரியாகப் பணியாற்றி வருபவா் அன்பரசு (30). அதே நிறுவனத்தில் டெக்னீஷியனாகப் பணியாற்றி வந்தவா் நெய்வேலியைச் சோ்ந்த அருள் ஆனந்த் (26).
இவா்கள் இருவரும் மணக்கடவு, பச்சாபாளையத்தில் பணிகள் முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தனா். தாராபுரம்-பழனி சாலையில் உள்ள காட்டம்மன் கோயில் பிரிவு அருகே வந்தபோது பழனியில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற அரசுப் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் அருள்ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில் காயமடைந்த அன்பரசுவை அருகிலிருந்தவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து அலங்கியம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.