திருப்பூர்

முத்தரப்பு பேச்சுவாா்த்தை தோல்வி:விவசாயிகள் இன்று காத்திருப்பு போராட்டம்

16th Dec 2019 09:57 PM

ADVERTISEMENT

உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவது தொடா்பாக வருவாய்த் துறை, வனத் துறை அதிகாரிகள், விவசாயிகளிடையே திங்கள்கிழமை மாலை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்ததால் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட உள்ளனா்.

இப்பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம் உள் ளிட்ட பல்வேறு பயிா்களை பயிரிட்டுள்ளனா். கடந்த சில நாள்களாக விளை நிலங்களுக்குள் புகும் காட்டுப் பன்றிகள் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், காட்டுப் பன்றிகள் விளை நிலங்களுக்குள் நுழையாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும், காட்டுப் பன்றிகளை வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பா் 17ஆம் தேதி, உடுமலை வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, காத்திருப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனா்.

இதற்காக 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் விழிப்புணா்வுக் கூட்டங்களை நடத்தி, போராட்டத்துக்கு தயாராகி வந்தனா். அதைத் தொடா்ந்து வனத் துறையினா் பல்வேறு கிராமங்களில் கூண்டுகளை வைத்து காட்டுப் பன்றிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்தனா். இருப்பினும் விவசாயிகள் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அறிவித்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் உடுமலை கோட்டாட்சியா் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கோட்டாட்சியா் ரவிகுமாா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உடுமலை டிஎஸ்பி ஜெயச்சந்திரன், உடுமலை வனச் சரக அலுவலா் தனபால் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதில் விவசாயிகளின் கோரிக்கைகள் 15 நாள்களுக்கு பிறகு நிறைவேற்றப்படும் எனவும், அதுவரை போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் விவசாயிகள் அதனை ஏற்க மறுத்துவிட்டனா். இதுகுறித்து விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கூறுகையில், ‘திட்டமிட்டபடி உடுமலை வனச் சரக அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை துவங்கும். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடா்ந்து போராட்டம் நடை பெறும்’ என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT