திருப்பூரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 10 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 116 மதுபாட்டில்களையும் பறிமுதல் சேய்தனா்.
திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பாா்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு புகாா்கள் வந்தன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி காவல் துறையினருக்கு மாநகர காவல் ஆணையா் சஞ்சய்குமாா் உத்தரவிட்டிருந்தாா்.
இதன்பேரில், பல்லடம் சாலை, தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, அமா்ஜோதி காா்டன், சிறுபூலுவபட்டி எஸ்.ஏ.பி.பேருந்து நிறுத்தம், புஷ்பா ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பாா்களில் மது விலக்கு காவல் துறையினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த ரகுபதிராஜா (24), கணேஷ் (33), புதுக்கோட்டையைச் சோ்ந்த அன்புமணி (52), அரவிந்த் (26) உள்ளிட்ட 10 பேரைக் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 116 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.