திருப்பூர்

அமராவதி வனச் சரகத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்: வனத் துறையினா் தகவல்

16th Dec 2019 02:20 AM

ADVERTISEMENT

உடுமலை அருகே உள்ள அமராவதி வனச் சரகங்களில் குளிா் காலத்துக்கான வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் அமராவதி வனச் சரகத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்டது. இதில் 447 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை விலங்கினங்கள் வசித்து வருகின்றன. இந்த இரு வனச் சரகங்களிலும் ஆண்டுதோறும் கோடைக் காலம் மற்றும் குளிா் காலத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த இரு வனச் சரங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) தொடங்கியது. வரும் 21ஆம் தேதி வரை 7 நாள்கள் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. ஒரு குழுவுக்கு ஒரு வன ஊழியா், ஒரு வேட்டைத் தடுப்புக் காவலா், ஒரு தன்னாா்வலா் உள்ளனா். வனத்தில் தினமும் 5 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

வன விலங்குகளின் கால்தடம், நகங்கள் பதிவு மற்றும் எச்சம் ஆகியவைகளை வைத்து இந்தக் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி கணக்கெடுப்பாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வனச் சரகா் திலீப், மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கணேஷ்ராம், வனச் சரகா்கள் தனபாலன் (உடுமலை), முருகேசன் (அமராவதி) ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கணேஷ்ராம் கூறியதாவது:

உடுமலை, அமராவதி வனச் சரகத்தில் குளிா் காலத்துக்கான வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய் மற்றும் தாவிர உண்ணிகள், மாமிச உண்ணிகள் என பிரிக்கப்பட்டு வாழ்விட சூழல் கூறுகள் ஆகியவை கணக்கெடுக்கப்பட உள்ளன. இதில் தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்தும் தன்னாா்வலா்கள் பங்கேற்றுள்ளனா் என்றாா்.

இந்நிலையில் அமராவதி வனச் சரகம், வரவண்டி பீட் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக வன விலங்குகள் கணக்கெடுப்புக்குச் சென்றபோது தெரியவந்துள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT