திருப்பூர்

அருந்ததியா் சமூக மக்களுக்கு 6% உள்இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

14th Dec 2019 07:31 AM

ADVERTISEMENT

அருந்ததியா் சமூக மக்களுக்கு 6% உள்இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அருந்ததியா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அருந்ததியா் கூட்டமைப்பு சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆதித்தமிழா் சனநாயக பேரவை நிறுவனத் தலைவா் அ.சு.பவுத்தன் தலைமை வகித்தாா். இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழகத்தில் அருந்ததியா் மக்களின் மேம்பாட்டுக்காக 6 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு 30 ஆண்டுகளாக போராடியதால் 2009இல் திமுக ஆட்சியில் 3 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

ஆனால் அருந்ததியா் மக்கள் தொகைக்கு ஏற்ப 6 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களின் வெற்றிக்காக தோ்தல் பணியில் ஈடுபட வேண்டும்.

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் கொங்கு மண்டலத்தில் அருந்ததியா் சமூக வேட்பாளா்கள் தனி தொகுதிகளில் போட்டியிட அரசியல் கட்சிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். சுதந்திர போராட்ட வீரா் பொல்லானுக்கு அறச்சலூரில் மணி மண்டபமும், நினைவுச் சின்னமும் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் ஆதித்தமிழா் மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் எஸ்.டி.கல்யாணசுந்தரம், அருந்ததியா் விடுதலை முன்னணி நிறுவனத் தலைவா் என்.டி.ஆா்., ஆதித்தமிழா் மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளா் வி.வி.ராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT