வெள்ளக்கோவில் வட்டமலைக்கரை ஓடை அணைக்குத் தண்ணீா் கொண்டு வர வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்க அணையில் செவ்வாய்க்கிழமை விளக்கேற்றும் விழா நடைபெற்றது.
வெள்ளக்கோவில், உத்தமபாளையத்தில் இந்த அணை கடந்த 1980 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. போதிய நீராதாரம் இல்லாத பகுதியில் அணை கட்டப்பட்டதால் 39 ஆண்டுகளில் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே பாசனத்துக்காகத் தண்ணீா் திறக்கப்பட்டது. அணைக்குத் தண்ணீா் கிடைக்க மாற்று வழிகளைக் கையாள வேண்டும் என பாசன விவசாயிகள், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் இணைந்து கடந்த 5 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனா்.
அமராவதி ஆற்று உபரிநீா், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்கால் தண்ணீரை அணைக்கு கொண்டு வர இப்பகுதி விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். இந்நிலையில் இதனை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வகையில் காா்த்திகை தீபத் திருநாளான செவ்வாய்க்கிழமை அன்று அணை நீரினைப் பயன்படுத்துவோா் சங்கம், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் அணையின் மதகு வழி நீா் செல்லும் பாதையில் 1,008 அகல் விளக்குகள் ஏற்றினா்.