தொடர் இழப்பு காரணமாக வெள்ளக்கோவில் பகுதி ஓ.இ. நூற்பாலைகளுக்கு வாரத்தில் 2 நாள்கள் கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில் ஓபன் எண்ட் (ஓ.இ) நூற்பாலைகள் சங்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். சங்கப் பொறுப்பாளர்கள் செல்லமுத்து, கதிரேசன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
கடந்த இரண்டு மாதங்களாக நூல்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால், நூல் விற்பனை செய்ய முடியவில்லை. இழப்பு காரணமாக இனிவரும் வாரங்களில் ஓ.இ. நூற்பாலைகளுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாள்கள் கட்டாய விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கழிவுப் பஞ்சுகள், பனியன் கழிவுத் துணிகளைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு நண்பனாக விளங்கும் ஓ.இ. நூற்பாலைகள் இயங்குவதால் மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் அரசு மானியம் வழங்க வேண்டும்.
பிடித்தம் செய்து வைத்துள்ள ஜிஎஸ்டி தொகையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும். நூற்பாலைகள் நிரந்தரமாக நிறுத்தப்படும் நிலையைத் தவிர்க்கவும், தொழிலாளர்கள், உப தொழில்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் ஜவுளித் தொழில்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட நூற்பாலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.