மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தனியார் துறை சார்பில் திருப்பூரில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இது குறித்து ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நாளை) காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில் தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள், ஓட்டுநர்கள், தையல் பயிற்சி பெற்றவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும்போது தங்களது வேலைவாய்ப்பு பதிவில் குறைகள் இருப்பதைக் கண்டறிந்தால் அதனை சரிசெய்து கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்தல், வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்டவற்றை பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த முகாமில் தேர்வு செய்யப்பட்டால் அவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட்டமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.