பல்லடம் அருகே காட்டூரில் உள்ள பிஏபி கிளை வாய்க்காலில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி புதன்கிழமை ஆய்வு செய்தார்.
பல்லடம் வட்டம், திருப்பூர் தெற்கு வட்டம் பகுதியில் பொதுப் பணித் துறையின் நீர்வள ஆதாரத் துறையின் சார்பில் காட்டூர் கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலும், கண்டியன்கோயில் கிராமத்தில் ரூ.12.50 லட்சம் மதிப்பிலும், நாச்சிபாளையம் கிராமத்தில் ரூ.3.50 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.39 லட்சம் மதிப்பில் பிஏபி கிளை வாய்க்காலில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, ஆழியாறு வடிநில உப கோட்ட உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவிப் பொறியாளர் சக்திகுமார், இளநிலைப் பொறியாளர் சின்னராஜ், வட்டாட்சியர்கள் சாந்தி (பல்லடம்), மகேஸ்வரன் (திருப்பூர் தெற்கு), விவசாயிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.