வெள்ளக்கோவிலை புதிய தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 1967இல் வெள்ளக்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உருவானது. காங்கயம் தாலுகாவில் இருந்து வெள்ளக்கோவிலைப் பிரித்து புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என வெள்ளக்கோவில் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் கடந்த 1988 ஆம் ஆண்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
தற்போது, நிர்வாக நலனுக்காக தமிழக அரசு புதிய தாலுகா, புதிய மாவட்டங்களை உருவாக்கி வருகிறது. வெள்ளக்கோவில் உள்வட்டத்தில் 16 வருவாய் கிராமங்கள், 9 ஊராட்சிகள் உள்ளன. இங்கு 3.40 லட்சம் பேரும், நகராட்சிப் பகுதியில் 75 ஆயிரம் பேரும் வசித்து வருகின்றனர்.
இப் பகுதியில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், 25 வங்கிகள், 89 பள்ளிகள், 3 கல்லூரிகள் உள்ளன. மேலும், 10 ஆயிரம் விசைத்தறிகள், நூல் மில்கள், 10 பனியன் நிறுவனங்கள், 30 அரிசி ஆலைகள், 50 சிறிய, பெரிய சமையல் எண்ணெய் ஆலைகள், 500 நிதி நிறுவனங்கள், 1,500 கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் 50 ஆயிரம் உள்ளூர், வெளி மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்குள்ள தொழில் துறைகள் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.
தற்போது, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு தாலுகா பகுதிகள் வெள்ளக்கோவிலை விட மிகக் குறைந்த மக்கள் தொகையும், பரப்பளவும் கொண்டவை ஆகும். அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாததால் வெள்ளக்கோவில் சட்டப் பேரவைத் தொகுதி தற்போது இல்லாமல் போய்விட்டது.
எனவே, அனைத்துக் கட்சிகள், சமூக நல அமைப்புகள், தொழில் துறையினர் ஒருங்கிணைந்து வெள்ளக்கோவிலை புதிய தாலுகா உருவாக்க ஒத்துழைக்க வேண்டும். தமிழக அரசும் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.