மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி திருப்பூரில் மோட்டார் தொழில் சார்ந்த அனைத்து சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் குமரன் சிலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மோட்டார் சங்க மாவட்டத் தலைவர் எம்.விஸ்வநாதன் தலைமை வகித்தார். இதில், வாகனப் பதிவு, வாகன காப்பீடு, அபராதம் என பல்வேறு கட்டணங்களை மத்திய, மாநில அரசுகள் உயர்த்தியுள்ளன.
தொழிலாளர்களை பாதிக்கும் மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். அனைத்து வகை பணிகளுக்கும் உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். காலாவதியான அரசுப் பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், திருப்பூர் மாவட்ட மோட்டார் ஆட்டோமொபைல்ஸ் லேபர் யூனியன், அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம், திருப்பூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம், திருப்பூர் ஆட்டோ ஓட்டுநர் பொது நலச் சங்கம், இருசக்கர வாகனப் பழுது நீக்குவோர் நலச் சங்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட் பலர் கலந்து கொண்டனர்.