திருப்பூர்

திருப்பூரில் கள்ள நோட்டுகளை  மாற்ற முயன்ற பெண் கைது

28th Aug 2019 07:42 AM

ADVERTISEMENT

திருப்பூரில் ரூ.2 ஆயிரம், ரூ.500 கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற பெண்ணை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும், அவரிடம் கள்ள நோட்டுகளை கொடுத்தவர் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே தினசரி மார்க்கெட்டில் மளிகைக் கடை நடத்தி வருபவர் ஜெய்சங்கர் (52). இவருடைய மளிகைக் கடைக்கு பெண் ஒருவர் திங்கள்கிழமை வந்துள்ளார். அவர் ரூ.660க்கு மளிகைப் பொருள்கள் வாங்கியுள்ளார்.
அதற்காக ரூ.2 ஆயிரம் மதிப்பிலான நோட்டை கொடுத்துள்ளார். அந்த ரூபாய் நோட்டு வழக்கமான 2 ஆயிரம் ரூபாய் நோட்டைபோல, இல்லாததால் ஜெய்சங்கருக்கு சந்தேகம் எழுந்தது. அந்த ரூபாய் நோட்டை அவர் பரிசோதித்தபோது, கள்ள நோட்டு என்ற சந்தேகம் அவருக்கு வலுத்தது.
இதையடுத்து, அந்தப் பெண்ணைப் பிடித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் ஜெய்சங்கர் ஒப்படைத்தார்.
விசாரணையில், அவர் திருப்பூர், குமரானந்தபுரத்தைச் சேர்ந்த உமாராணி (47) என்பதும், திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், 20 ஆயிரத்துக்கு கள்ள நோட்டு வைத்திருந்ததாகவும், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள துணிக்கடையில் துணி வாங்கி ரூ.4 ஆயிரத்தை மாற்றியதாகவும் உமாராணி தெரிவித்துள்ளார். 
கோவையைச் சேர்ந்த மோகன் என்பவர் கள்ள நோட்டுகளை கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உமாராணியைக் கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்து 6 எண்ணிகையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், 8 எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் ரூ.16 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
உமாராணியிடம் கள்ள நோட்டுகளை கொடுத்த மோகன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். பின்னலாடை நகரமான திருப்பூரில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT