அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்தும், அதற்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரியும் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் அறிவித்திருந்தனர்.
இதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்திருந்தனர். இதையடுத்து, காவல் துறையின் தடையை மீறி திருப்பூர்- அவிநாசி சாலை, அனுப்பர்பாளையம்புதூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்தவர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் ச.நந்தகோபால், வேலம்பாளையம் நகரச் செயலாளர் பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம், தபெதிக நிர்வாகி முத்துகுமார், திராவிட தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.
உடுமலையில்...:
உடுமலையை அடுத்துள்ள குடிமங்கலத்தில் ஆதித் தமிழர் பேரவை சார்பில் நால்ரோட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் ப.விஷ்ணுகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ப.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வழக்குரைஞர் அணிச் செயலாளர் கு.பெரியார்தாசன் கண்டன உரையாற்றினார். மாநில இளைஞரணிச் செயலாளர் மா.ஈழவேந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.