திருப்பூர்

அமராவதி சர்க்கரை ஆலையில் நிர்வாக குளறுபடி: ஆட்சியர் தலையிட விவசாயிகள் கோரிக்கை

28th Aug 2019 07:40 AM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே உள்ள அமராவதி சர்க்கரை ஆலையில் நிலவி வரும் நிர்வாக குளறுபடிகளால் அடுத்த ஆண்டு கரும்பு அறவைக்கு விவசாயிகள் பதிவு செய்ய மாட்டார்கள் என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், விவசாயி ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது: 
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மொத்தம் 500 டன் கரும்பு அறவை செய்வதற்கு பதிலாக 250 டன் மட்டுமே அறவை செய்யப்படுகிறது. 
இந்த ஆலையில் மொத்தம் 3,280 ஏக்கர் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் பதிவு செய்திருந்தனர். கள அளவில் ஊழியர்கள் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். கடந்த ஜூன் 21 ஆம் தேதி வரை மட்டுமே விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு இன்னும் பணம் வழங்கப்படவில்லை.
பல்வேறு நிர்வாக குளறுபடிகள், களப் பணியில் முறைகேடு உள்ளிட்ட காரணங்களால் அடுத்த ஆண்டு கரும்பு அறவைக்கு விவசாயிகள் அங்கு பதிவு செய்ய மாட்டார்கள். ஆலையை மறு சீரமைப்பு செய்ய ஒதுக்கப்பட்ட ரூ.25 கோடி நிதியும் நின்றுபோனது. எனவே, இந்தப் பிரச்னையில் ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் உடுக்கம்பாளையம் பரமசிவம்:
தமிழகத்தகில் 4 ஆண்டுக்கு பிறகு பால் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ரூ.4 விலை உயர்வு அறிவித்தாலும் ரூ.3.50 தான் வழங்கப்படுகிறது. 50 பைசா ஈவுத் தொகையாக பிடித்தம் செய்யப்படுகிறது.
ஒன்றியங்கள் தர வேண்டிய தொகையை கொள்முதல் விலையில் இருந்து பிடித்தம் செய்து தருவது சரியல்ல. எனவே, உயர்த்தப்பட்ட ரூ.4 விலையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அத்துடன் கொழுப்பு அளவு 8.2, 4.3 என்று இருந்தால்தான் உயர்த்தப்பட்ட விலை கொடுக்கப்படுகிறது.
பால் விற்பனை விலையை தனியார் நிறுவனங்களும் உயர்த்திவிட்டன. ஆனால், விவசாயிகளுக்கு தர வேண்டிய கொள்முதல் விலை உயர்வை தனியார் நிறுவனங்கள் அமல்படுத்தவில்லை.
தமிழகத்தில் மொத்தம் ஒரு கோடியே 25 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 32 அல்லது 33 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுதவிர 90 லட்சம் லிட்டருக்கு மேல் தனியார் நிறுவனங்கள்தான் கொள்முதல் செய்கின்றன. எனவே, தனியார் நிறுவனங்கள் அரசு அறிவித்த பால் கொள்முதல் விலை உயர்வை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 பிஏபி பாசன சபை நிர்வாகி கோபால்: 
கேரளத்தில் பால் கொள்முதல் விலைக்கும், நுகர்வோருக்கு விற்கும் விலைக்கும் இடையில் நிர்வாக செலவினங்களுக்காக லிட்டருக்கு ரூ.7 தான் செலவிடப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ரூ.17 ஆக செலவிடப்படுகிறது. எனவே, நிர்வாகரீதியான செலவை குறைத்து பால் உற்பத்தியாளர், நுகர்வோர் இருதரப்பினரும் பயனடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கனமழை காரணமாக சேதமடைந்த காண்டூர் கால்வாயை சீரமைத்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வரவைத்து பல்லடம், பொங்கலூர், காங்கயம், வெள்ளக்கோவில் விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நொய்யல் ஆற்றைத் தூய்மைப்படுத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது. அதில், எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். சிவன்மலை அருகே நொய்யல் ஆற்றுப் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார்,  கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் பிரபு, இணை இயக்குநர் (வேளாண்மை) மனோகரன், வருவாய் கோட்டாட்சியர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆனந்தகுமார், துணை ஆட்சியர்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT