திருப்பூர்

மக்காச்சோள பாதிப்புக்கு நஷ்ட ஈடு வழங்குவதில் குளறுபடி: விவசாயிகள் குற்றச்சாட்டு

23rd Aug 2019 10:11 AM

ADVERTISEMENT

உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் படைப்புழு தாக்குதலால் மக்காச்சோள பயிர் பாதிப்புக்கு விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
 உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் சி. இந்திரவல்லி தலைமை வகித்தார். வட்டாட்சியர் பழனியம்மாள் (மடத்துக்குளம்) முன்னிலை வகித்தார்.
 இதில் விவசாயிகள் பேசியது:
சௌந்திரராஜன்(குமரலிங்கம்): அமராவதி பாசனத்துக்கு உள்பட்ட ராமகுளம் வாய்க்கால் தூரவாரப்படாததால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறாமல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வாயக்காலை உடனடியாக தூர்வார வேண்டும்.
பரமசிவம் (நீரினை பயன்படுத்துவோர் சங்கம்): பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வு போதாது. மேலும் விலையை அதிகப்படுத்திக் கொடுக்க வேண்டும். நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாதபோது ஆண்டு முழுவதும் அவற்றை தூர் வார அரசு உத்தரவிட வேண்டும்.
எஸ்.ஆர்.மதுசூதனன்(தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): படைப்புழு தாக்குதலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகின்றன. உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்காமல் வேறு நபர்களுக்கு வழங்கப்படுகிறது. மலைவாழ் மக்களுக்கு ரேஷன் பொருள்கள் சென்று சேரவில்லை.
மடத்துக்குளம் வட்ட விவசாயிகள்: படைப்புழு தாக்குதலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். 
வேளாண் அலுவலர்கள்: நஷ்ட ஈடு வழங்குவதில் எந்த தவறும் நடக்கவில்லை. கிராம நிர்வாக அலுவலகத்தில் கொடுக்கப்படும் சிட்டா, அடங்கலின்படிதான் நஷ்டஈடு வழங்கப்படுகிறது. 
கோட்டாட்சியர் சி.இந்திரவல்லி: விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்ட விவரத்தை வேளாண் துறை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு மாவட்ட அலுவலரிடம் இது குறித்து விசாரிக்கப்படும்.
சௌந்திரராஜன் (இந்திய கம்யூனிஸ்ட்): விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு அதிகாரிகள் யாரும் வருவதில்லை. ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் ஏதாவது காரணம் கூறுவதால் இக்கூட்டம் நடத்துவதே வீணாகிறது.
நித்தியானந்தம் (வேடபட்டி): அமராவதி பிரதான கால்வாயில் உயிர் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனாலும் கடைமடைக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே உடனடியாக வாய்க்காலை தூர் வார வேண்டும். மேலும் வேடபட்டி கிராமத்தில் குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால் விவசாயிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஞானப்பிரகாசம் (குடிமங்கலம் ஒன்றியம்): எங்களது ஒன்றியத்தில் மூங்கில்தொழுவு கூட்டுறவு சங்கத்தில் செயலர் இல்லாததால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் யாரும் கடன் பெற முடியவில்லை.
பெதப்பம்பட்டி விவசாயிகள்: பெதப்பம்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளன. இதனால் பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. காலை நேரத்தில் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 
 கோட்டாட்சியர் சி.இந்திரவல்லி: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அந்தந்த துறை உயர் அதிகாரிகள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும். அடுத்த கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT