திருப்பூர்

உயர் மின்கோபுரம் திட்டம்: நில அளவீட்டுப் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு

23rd Aug 2019 10:14 AM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டம், பல்லடம், தாராபுரம் பகுதிகளில் விளை நிலங்களின் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்கும் திட்டத்துக்கான நில அளவீட்டுப் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர். 
மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழக அரசின் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் இணைந்து தமிழகத்தின் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உயர்மின் கோபுரங்களுக்கு பதிலாக சாலையோரமாக கேபிள் அமைத்து மின்சாரத்தைக் கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாகப் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இருப்பினும் விவசாயிகளின் கடும் ஆட்சேபனையை மீறி காவல் துறை, வருவாய்த் துறையினர் இணைந்து நில அளவீட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
பொங்கலூர் ஒன்றியம், வாவிபாளையம் ஊராட்சி- சாலையூர், காளியப்பன்கவுண்டன்புதூர் உள்ளிட்ட கிராமங்களில்  கடந்த 1ஆம் தேதி பவர்கிரிட் நிறுவனத்தினர், அரசு அலுவலர்கள் நில அளவீட்டுப் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த விவசாயிகள் அப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நில அளவீட்டுப் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பவர்கிரிட் நிறுவனத்தினர் விவசாய நிலங்களில் அளவீடு செய்ய வியாழக்கிழமை வந்தனர். அப்போது திருப்பூர் கோட்டாட்சியர் செண்பகவள்ளி, பல்லடம் வட்டாட்சியர் சாந்தி, நலிந்தோர் நலத்திட்ட தனி வட்டாட்சியர் கனிமொழி, திருப்பூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் ஆகியோர் உடன் வந்தனர்.
இதனை அறிந்த வாவிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் பார்த்தசாரதி, உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட இளைஞரணித் தலைவர் சோமசுந்தரம், கோவை மாவட்ட விவசாய சங்கத் தலைவர் தமிழ் ராஜேந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் விவசாயிகளின் நிலத்தில் அளவீடு செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அவர்களைத்  தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பார்த்தசாரதி, சோமசுந்தரம் உள்பட 10 பேரை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் விவசாய குடும்பப் பெண்கள் தங்களது கைக் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை மகளிர் போலீஸார் அப்புறப்படுத்தினர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது. 
தாராபுரம் அருகே போராட்டம்: தாராபுரத்தை அடுத்த ராசிபாளையம், ஆவாரங்காடு பகுதியில் விவசாயிகள் கலைச்செல்வி, கனகராஜுக்கு சொந்தமாக 4.5  ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்க நிலத்தை அளவீடு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனையடுத்து விவசாயிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் மாலை 6 மணி அளவில் போராட்டத்தைக் கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT