திருப்பூர்

அவிநாசியில் சங்கமாங்குளம் சீரமைக்கும் பணி துவக்கம்

16th Aug 2019 06:56 AM

ADVERTISEMENT

அவிநாசியில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இணைந்து சங்கமாங்குளத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி சீரமைக்கும் பணியை வியாழக்கிழமை துவங்கினர்.
அவிநாசியில் நீராதாரக் குளங்களில் ஒன்றாக சங்கமாங்குளம் உள்ளது. 240 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட இக்குளத்தில் சீமைக்கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து நீர்வழிப் பாதைகள் அடைப்பட்டு மழை பெய்தாலும் குளத்தில் நீர் நிரம்பாமல் நீராதாரம் பாதிக்கப்பட்டு வந்தது. 
இதையடுத்து, அரசு அனுமதியுடன் அவிநாசி குளம் காக்கும் இயக்கம் சார்பில் வியாழக்கிழமை சங்கமாங்குளத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.  இதில், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் என ஏராளமானோர் தங்களை இணைந்துக் கொண்டுள்ளனர். 
சீரமைப்புப் பணிக்கா 15க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஒரு வார காலத்துக்குள் இந்தக் குளத்தை சீரமைக்கும் பணியை நிறைவு செய்து அதில் கொன்றை, வாகை, இலுப்பை,  கருங்காலி, ஆயம், வேம்பு, புரசு, புங்கன், நரிவிழி, விராளி, ஈட்டி, பூவரசன், நொச்சி, ஆலாமரம் உள்ளிட்ட மரக்கன்றுகளை நடத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக 500க்கும் மேற்பட்ட விதைப் பந்துகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது.  
இந்தக் குளத்தைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவிநாசியில் சனிக்கிழமை  காலை, குழந்தைகளுக்கான மராத்தான் போட்டியும் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT