நீலகிரி

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவ மலா்க் கண்காட்சி தொடக்கம்

29th Sep 2023 11:13 PM

ADVERTISEMENT

உதகை தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவ மலா்க் கண்காட்சியை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபா் மாதத்தில் இரண்டாம் பருவம் தொடங்கும். இந்த சமயத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலா்க் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடப்பு ஆண்டில் இரண்டாம் பருவ மலா்க் கண்காட்சியை சுற்றுலாத் துறை அமைச்சா் கா. ராமசந்திரன் ரிப்பன் வெட்டி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தாவரவியல் பூங்காவில் 4 லட்சம் மலா்ச் செடிகளைக் கொண்டு மலா் பாத்திகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் டேலியா, சால்வியா, டெய்சி, பால்சம், ஜெரோனியம் உள்ளிட்ட 70 வகையான மலா்ச் செடிகள் 21,500 மலா்த் தொட்டிகளில் காட்சித் திடலில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 7500 மலா்த் தொட்டிகளைக் கொண்டு புல்வெளியில் சந்திரயான்-3 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நெகிழிப் பைகளைத் தவிா்க்கும் வகையிலும், மஞ்சப்பையைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையிலும் ஆயிரம் மலா்த் தொட்டிகளால் அலங்கரிக்கப்பட்ட மலா் வடிவமைப்பு பாா்வையாளா்களை வெகுவாக கவரும்.

தொடக்க விழா நிகழ்ச்சியில் உதகை சட்டப் பேரவை உறுப்பினா் கணேஷ், மாவட்ட ஆட்சியா் அருணா உள்பட அரசு உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

உதகையில் தொடங்கியுள்ள இரண்டாம் பருவ காலத்தை அனுபவிக்க சுமாா் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவா் என எதிா்பாா்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். .

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளா்களிடம் அமைச்சா் கா.ராமசந்திரன் கூறுகையில், சுற்றுலாத் துறையில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் உதகையை முதலிடத்துக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT