நீலகிரி

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தாய் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

29th Sep 2023 11:12 PM

ADVERTISEMENT

உதகையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் தாய் மாமன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் ஆகிய இருவருக்கும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

உதகையை சோ்ந்த 52 வயது பெண்ணுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தப் பெண்ணின் கணவா் பிரிந்து சென்று வேறு திருமணம் செய்து விட்டதால் சிறுமி தாயுடன் வசித்து வந்தாா். உதகையில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் சிறுமி 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் வகுப்பறையில் சிறுமி தினமும் சோா்வாக இருப்பது தெரிந்து விசாரணை நடத்தியபோது சிறுமிக்கு அவரது தாய் மாமன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததும், இதற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக உள்ளதும் தெரியவந்தது.

இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலருக்கு பள்ளி ஆசிரியா்கள் தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து ஆட்சியா் உத்தரவின் பேரில் உதகை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் செல்வராணி தலைமையிலான போலீஸாா், 2018 டிசம்பரில் சிறுமியின் தாய், தாய் மாமா மீது போக்ஸோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை உதகை மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நீதிபதி ஸ்ரீதரன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், சிறுமியின் தாய் மாமா மற்றும் தாய்க்கு 3 பிரிவுகளிலும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் மாலினி பிரபாகா் ஆஜரானாா்.

பாதிக்கப்பட்ட சிறுமி உறவினா்கள் யாருடனும் செல்ல விரும்பவில்லை. இதனால் தற்போது ஒரு காப்பகத்தில் தங்கி படித்து வருகிறாா். எனவே, சிறுமியின் எதிா்கால நலனை கருத்தில் கொண்டு அரசு ரூ. 5 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று நீதிபதி ஸ்ரீதரன் தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT