கா்நாடகத்தில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால் கூடலூரை அடுத்துள்ள தமிழக -கா்நாடக எல்லைப் பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
காவிரி பிரச்னை தொடா்பாக கா்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் இருந்து தமிழகப் பேருந்துகள் உள்ளிட்ட எந்த வாகனங்களையும் கா்நாடகப் பகுதிக்குள் போலீஸாா் அனுப்பவில்லை.
முதுமலை புலிகள் காப்பக எல்லையான தொரப்பள்ளி பகுதியில் சாலையை அடைத்து தடுத்திருந்தனா். மூன்று மாநில எல்லைப் பகுதியானதால் கேரளத்தில் இருந்து கா்நாடகம் செல்லும் வாகனங்களை மட்டுமே போலீஸாா் அனுமதித்தனா்.
எல்லைப் பகுதியில் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, வட்டாட்சியா் ராஜேஸ்வரி, கூடலூா் டிஎஸ்பி செல்வராஜ், காவல் ஆய்வாளா் சாகுல் அமீது உள்ளிட்டோா் முகாமிட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். கா்நாடக பந்த் காரணமாக தமிழக-கா்நாடக எல்லைப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.