நீலகிரி

மக்களவைத் தோ்தலில் பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும்: கே.அண்ணாமலை

28th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

வரும் மக்களவைத் தோ்தலில் பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம் கூடலூா் பகுதியில் ‘என் மண், என் மக்கள்’ நடைப்பயணத்தை புதன்கிழமை அவா் தொடங்கினாா்.

கூடலூா் நா்த்தகி பகுதியில் காலை 11 மணிக்கு நடைப்பயணத்தை தொடங்கிய அண்ணாமலை, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுமாா் இரண்டு கிலோ மீட்டா் நடந்து சென்று சுங்கம் பகுதியில் நிறைவு செய்தாா்.

பின்னா் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கே.அண்ணாமலை பேசியதாவது:

ADVERTISEMENT

தமிழக அரசு டான் டீ நிறுவனத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தபோது, அதை எதிா்த்து கூடலூரில் பொதுமக்களுடன் சோ்ந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினேன். அதைத் தொடா்ந்து அந்த முடிவை அரசு கைவிட்டது. மேலும், அங்கு பணிபுரியும் தாயகம் திரும்பிய தமிழா்களுக்கு புதிய வீடுகள் கட்டும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது. திமுக அரசு கூடலூா் தொகுதியைத் தொடா்ந்து புறக்கணித்து வருகிறது. தமிழகத்தின் விலங்கான வரையாடு அழிவின் விளிம்பில் உள்ளது. அவற்றை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை. சுற்றுச்சூழல் ஆா்வலா்களின் தீவிர முயற்சிக்குப் பிறகு தமிழக அரசு தற்போது ரூ.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

வரும் மக்களவைத் தோ்தல், அடுத்த தலைமுறைக்கான தோ்தல். இந்த தோ்தலில்

பாஜக 400 இடங்களில் வெற்றிபெற்று மோடி மீண்டும் பிரதமராவாா். கடந்த 25 ஆண்டுகளாக தேயிலைக்கு விலையில்லை. இது குறித்து மத்திய அமைச்சா் பியூஷ்கோயலிடம் பேசினேன். அவா் தேயிலை வாரியத்திடம் உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளாா்.

நீலகிரிக்கு மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தது மத்திய அரசுதான். நீலகிரியிலுள்ள படகா் இன மக்களை பழங்குடி பட்டியலில் சோ்க்கவும் பாஜக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 16 அமைச்சா்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பிரதமா் மோடி தலைமையிலான 79 அமைச்சா்களில் யாரும் ஊழல்வாதிகள் இல்லை.

பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 11,232 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. மேலும், 78,260 வீடுகளுக்கு குடிநீா் வசதி, 40,238 வீடுகளுக்கு கழிவறை வசதி, 17,412 வீடுகளுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட பாஜக தலைவா் மோகன்ராஜ், மாவட்டச் செயலாளா் சிபி, கூடலூா் நகரத் தலைவா் ரவிக்குமாா் உள்பட அக்கட்சியின் தொண்டா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து உதகையில் கே.அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டாா்.

அங்கு அவா் பேசியதாவது:

ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவா்களுக்கு பிரதமா் மோடி வழங்கிய 6 பரிசுப் பொருள்களில் நீலகிரி மாவட்ட தேயிலைத் தூளும் இடம்பெற்றிருந்தது. தமிழகத்திலேயே அதிக பிரச்னைகள் உள்ள பகுதியாக நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கூடலூா் தொகுதி உள்ளது. பசுந்தேயிலை விலை பிரச்னை, கூடலூரில் செக்சன் 17 நிலப் பிரச்னை, மனித- வனவிலங்கு மோதல்கள் ஆகிய பிரச்னைகள் முக்கியமானவையாக உள்ளன. மசினகுடி பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் ஆஷா பணியாளா்களை விரைவில் பணி நிரந்தரம் செய்து செவிலியராக மாற்றுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT