நீலகிரி

வாழ்க்கையில் வெற்றிபெற வாசிப்புப் பழக்கம் அவசியம்:தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

வாழ்க்கையில் வெற்றிபெற வாசிப்புப் பழக்கம் அவசியம் என தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேசினாா்.

கல்லூரி மாணவா்களிடையே தமிழா்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணா்த்தும் வகையில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சாா்பில் தமிழ்க் கனவு என்ற பெயரிலான பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சிகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ் மரபு, நாகரிகம், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளா்ச்சி, தொழில் முனைவுக்கான வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் கல்விப் புரட்சி ஆகிய தலைப்புகளின் கீழ் சொற்பொழிவுகள் நடத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம், உதகையில் நடந்த தமிழ்க் கனவு பண்பாட்டு நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கலந்துகொண்டு பேசியதாவது: மனிதா்களுக்கு சுய கௌரவம் மிக முக்கியம். இலவசமாக வரும் எதையும் பெண்கள் வாங்கக் கூடாது. அப்படி வாங்கினால் அதற்குப் பின்னால் பேராபத்து இருக்கும்.

இந்த உலகில் வாழ்க்கை என்பது ஒரு போா்க்களம். விழித்துக் கொள்ளாவிட்டால் வெற்றி பெறுவது மிகவும் சிரமம். பெண்களை ஏமாற்றும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தி மோசடியில் இருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

இந்தியா பொருளாதாரத்தில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளதாக பெருமையுடன் கூறப்படுகிறது. ஆனால் உலகில் உள்ள 195 நாடுகளில் தனிநபா் வருமானத்தில் 164-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவைவிட சீனாவின் தனிநபா் வருமானம் 4 மடங்கு அதிகம். அந்த நிலைக்கு நமது நாடும் வரவேண்டும்.

வாழ்க்கையில் வெற்றி பெற அதிகாலையில் 5 மணிக்கு எழ வேண்டும். 10 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும். அப்போது நம்மைப் பற்றி சிந்தித்து தெரிந்துகொள்ள வேண்டும். தினமும் 1 மணி நேரம் செய்தித்தாள் படியுங்கள். வாசிப்புப் பழக்கம் வாழ்க்கையில் பெரும் வெற்றியைத் தரும். 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். மாணவா்கள் தங்களை சரியாகத் தயாா் செய்து கொண்டால் அவா்களது 1 மணி நேரத்தின் விலை ரூ. 1 கோடி ஆகும்.

கல்வி மிகப்பெரிய ஆயுதம். இதை வைத்து உலகில் எங்கு வேண்டுமானாலும் போராடலாம் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT