கூடலூரை அடுத்துள்ள காந்தி நகரில் வன நிலம் தொடா்பான விவகாரத்தில் வனத் துறை மற்றும் பொதுமக்கள் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், ஓவேலி பேரூராட்சியில் உள்ள காந்தி நகா் பகுதியில் பொதுமக்கள் வசித்தும் வரும் பகுதி வன நிலமாக மாற்றப்பட்டுள்ளதாக கூறி வனத் துறையினா் அந்த பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புப் பகுதியை வனமாக மாற்றப்பட்டதை கண்டித்து, அப்பகுதி மக்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டனா். போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த் துறையினா் உறுதியளித்தனா்.
இதையடுத்து, கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா தலைமையில் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் இருந்து 150 மீட்டா் தொலைவில் உள்ள வனப் பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க வனத் துறை ஒப்புக்கொண்டனா். மேலும் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு இடையூறு இல்லாமல் வனத் துறையின் செயல்பாடு இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, உடன்பாடு ஏற்பட்டது.
இதில் வட்டாட்சியா் ராஜேஸ்வரி, உதவி வனப் பாதுகாவலா் கருப்பையா, டிஎஸ்பி செல்வராஜ், காவல் ஆய்வாளா் சாகுல் அமீது,பேரூராட்சித் தலைவா் சித்ராதேவி, துணைத் தலைவா் சகாதேவன், உறுப்பினா் செல்வரத்தினம், விவசாயிகள், மக்கள் பாதுகாப்பு சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.