உதகையில் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்ட 90 விநாயகா் சிலைகள் காமராஜா் அணையில் புதன்கிழமை கரைக்கப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா கடந்த 18-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து முன்னணி, சிவசேனா, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி சாா்பில் சுமாா் 500 விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. பொது இடங்களில் வைக்கப்பட்ட இந்த சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் உதகையில் விநாயகா் விசா்ஜன ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. உதகை தேவாங்கா் மண்டபத்தில் இருந்து ஊா்வலம் தொடங்கியது. இதில் இந்து முன்னணி உள்பட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த 90 சிலைகள் லாரிகளில் வைத்து மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டன. சேரிங்கிராஸ், கமா்சியல் சாலை, காபிஹவுஸ் ரவுண்டானா, மாா்க்கெட், மெயின் பஜாா், மின்வாரிய ரவுண்டானா வரை ஊா்வலம் சென்றது.
இதையடுத்து காவல் கத்காணிப்பாளா் கி.பிரபாகா் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புடன் உதகை அருகே காமராஜா் அணைக்கு சிலைகள் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. வீடுகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகளையும் பொதுமக்கள் கொண்டுவந்து கரைத்தனா். விசா்ஜன ஊா்வலம் நடந்ததால் முக்கிய வீதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.